கவிதை தொகுப்புகள்


தேடல் 

எனக்கான தேடல்களில்
தொலைந்து போகிறேன்;
இப்பொழுது
என்னையும் தேடி!



**********************************************************************************

பாறை 

பாறையாக கிடக்கிறேன்
இதயம் கல்லாக;
செதுக்க நினைக்கிறார்கள்!
உடைகிறது உளிகள் மட்டுமே!

உடைந்து உடைந்து
உதிரும்
உளிகளுக்கு
இக்கல்லிருந்து
கசியும் இக்கண்ணீர்த்துளிகள்
சமர்ப்பணம்

*********************************************************************************

அறிந்தும் அறியாததும் 

அர்த்தமின்றி உன்னுடன்
ஆயிரம் முறை பேசியிருக்கிறேன்;
ஆனால்
ஒரு முறை கூட நினைக்கவில்லை
உன்னை மட்டுமே
நினைக்கப் போகிறேன்
என்று...

******************************************************************

கொடுத்துவைத்தவை எழுத்துக்கள்!

புதிதாய் பிறந்த உன் வயதுக்கு
செல்லமாய் ஒரு "ஹலோ"!
வாழ்த்து மடல் எழுதி யோசித்தேன்
கொடுத்து வைத்தவை
என் எழுத்துக்கள்!!

வாழ்த்துக்கள் கண்டதும்
புன்னைகைக்கும் உன் இமை
பார்த்து ரசிப்பது என்னவோ
எழுத்துக்கள் மட்டுமே...

**********************************************************************************

ப்ரியமானவனுக்கு

தினம் தினம் சந்திக்கிறோம்
சிலிர்ப்பாய் பூத்திருக்கும் ரோஜாக்களாய்
ஆனாலும் மெளனமாய் பிரிக்கின்றோம்
பறிக்காமல் உதிரும் இதழ்களாய்!

நாளை நாளை என்று சொல்லிட நினைக்கின்றேன்;
உன் நினைவுகளை நெஞ்சோரம் சேகரிக்கின்றேன்!
என் சின்ன சின்ன கண்களுக்குள்
ஏகமாய் ஆசைகள் வளர்க்கின்றேன்!

உன்னை தினம் பார்க்கும் பொழுதெல்லாம்
ஒத்திகை பார்த்ததெல்லாம் மறப்பது ஏன்?
ஊர் கதையெல்லாம் நிரம்ப பேசியப் பின்னும்
நம் உள்ளத்தின் கதை இன்னும் உள்ளே உறங்குவது ஏன்?

இனியும் மெளனங்கள் சகிப்பதற்கு இல்லை
நம்மிடையே கண்ணாடிச்சுவர்கள் பொறுப்பதற்குயில்லை
கண்கள் பேசிய ஜாலங்களெல்லாம்
உள்ளத்தோடு உள்ளமாய்
மொழிப் பெயர்க்கின்றேன்!

மனதொன்று நினைக்க உதடொன்று பேச
போலி வேஷங்கள் இன்னுமா?
மொழிகள் எல்லாம் எனக்குத்தான் பஞ்சம்
பதில் சொல்லேன் மெளனத்தில் நீயுமா?
***************************************************

யாரோ அவன் யாரோ! 

காமெடி வாழ்க்கையில் இருந்து
கல்யாண வாழ்க்கையில்
கால் எடுத்து வைக்கிறேன் - என்
கல்யாண கலக்கலை
கவிதையில் சொல்கிறேன்...

தெய்வங்கள் சாட்சியாய்
மூன்று முடிச்சு இட்டுவிட என்னவன் என்னருகே...
அவன் இரு கரங்களுக்கு இடையே சிரம் தாழ்த்தி நான்...
என்னையும் மீறி வந்த ஒரு கண்ணீர் துளி
கட்டை விரலால் தட்டி விட்டு,கண்ணடித்து
குனிந்துக் கொண்டேன்...கண்டு கொள்ளாமல்

அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டுமாம்
எல்லோரும் சொன்னார்கள் - நான் அம்மி
மிதிக்கும் சாக்கில் என்னவனின் பெருவிரலை
அழுத்தி விட்டு "சாரி" சொல்லி திரும்பி விட்டேன்
நக்கலாக...

வாஸ்த்து பார்த்து வடிவமைத்த வீட்டில்
குடிபுகுந்தேன் புதிதான என்னவனோடு...
மிரட்சியில் மென்று விழுங்கியபடி
என்வனைப் பார்த்தேன் - வாழ்கையில் முதல் முறை ஒரு
பார்வையால் காயப்பட்டேன் - ஆம் அவன்
எனை பார்த்துக்கொண்டிருந்தான்

என் பிஞ்சுவிரல் பற்றி
பளிச்சென கேட்டான் "என்னை பிடிச்சிருக்கா?"
"ம்ம்ம்..." சாதாரணமாக சொல்லி விட்டேன் - ஆனால்
மனதில் எண்ணிலடங்கா ஏக்கங்கள்

மறுநாள் எழும்ப மனமின்றி
உறங்கி கொண்டிருந்தேன் - என்னவனோ
என் மெட்டியில் முத்தமிட்டு மெல்லிய தாடி தொட்டு
"எழுந்தரிடா மணி ஏழு ச்சு" - நானே
"போடா என் அன்பு புருசா,இன்னும் கொஞ்ச நேரம்..."

சில்லென்ற சில்மிஷங்களோடு நானும் அவனும்
சமையலறையில்...என்னை சீண்டாமல்
சிக்க வைக்கும் அவனது கண்கள்
காமனின் பாணங்கள் போலும்
தெரியாத சமையலையும் சமாளிக்கிறேன்
என்னவனோடு...

கற்கண்டாய் கரையும் இந்த வாழ்வை
நான் இன்னும் பெறவில்லை - ஏனெனில்
பருவ ஏடுகளின் கனவுகளால் பாதிக்கபட்ட
என் இதயத்தை அலங்கரிக்க
என்னவனும் இன்னும் வரவில்லை
நெற்றியில் கை வைத்து
கண்களை சுருக்கி காத்திருக்கிறேன்

யாரோ அவன் யாரோ!

***********************************************************************************
 

பித்து 

சட்டென சென்றுவிட்டாய்
திருவிழாவில்
தொலைந்த
குழந்தையாய்..
உன்னுடன் சென்ற
இடமெல்லாம்
தேடித் தேடி சலிக்கிறேன்!

நீயோ,
வார்த்தைகளையெல்லாம்
புதைத்து வைக்கிறாய்;
வழிகளையெல்லாம்
அடைத்து வைக்கிறாய்;
உனக்கும் எனக்குமான
தொலைவை அதிகரிக்கிறாய்
விடைத் தெரியாமல்
உலகில்
சூன்யமாய் அலைகிறேன்...

உன்னை சுமந்து அலைந்த..
நம் காதலிருந்த இடம்
ஏன் பாறாங்கல்லாய்
கனக்கிறது..?

முன்பு உன் மேல் எனக்கு
காதல் பித்து...
இன்றோ உன்னால்
நானே பித்து....!!

***********************************************************************************

நீ 

அழுகிற பிள்ளையை
அணைக்காத அன்னை
நீ...

கடலோடு சேராத
கங்கை நீ...

ராகங்கள் சொல்லாத
புல்லாங்குழல் நீ...

மண்னோடு முட்டாத
மழைத்துளி நீ...

தவத்திற்கு மயங்காத
கடவுள் நீ...

எனக்கு காதல்
இடாமல்
சபிக்கின்ற சாத்தான்
நீ!!

******************************************************************

யாசிப்பு

யாசிக்க யாசிக்க காதல் இடாமல்
"முடியாது" - வார்த்தை
ஏவுகணையிடும் உன்னை
வெறுக்கத் தோன்றாமல்
மறுபடி மறுபடி
காதலித்துத் தொலைக்கிறேன்.

*************************************************************************************



எங்கே இருக்காயடா? 

நித்தமும் உன்னை நினைக்கையில்
நினைவெல்லாம் இனிக்குதடா...
சித்தமும் கலங்கி சிந்தை
இல்லாமல் போகுதடா...
கனவெல்லாம் கள்வனே உந்தன்
காதலால் கலங்குதடா...
தேகமெல்லாம் நீ தீண்ட
தவங்கள் பல இருக்குதடா...
எங்கே இருக்காயடா?
எப்போது வருவாயடா
என் நெஞ்சமெல்லாம் விம்முதடா...




******************************************************

நான்

என் மாலை நேரங்கள் மெளனமாய்
செல்வதைப் பார்த்து - காலம்
வியந்துதான் போகிறது
உன்னுடனான மாலை நேரங்களை
கைப்பிடித்து உன் தோள் சாய்ந்து
பேசியே கழித்தப் பெண்ணா இவளென்று!!

***********************************************************************************

காதலிக்க வை 

சிரிக்க வை என்னை சிதற வை...
உருக வை உனக்காக உருமாற வை...
எண்ண வை உன்னை நினைத்து ஏங்க வை...
மருக வை இவ்வுலகை மறக்க வை...
கதற வை என் கண்ணீர் பார்க்க வை...
சினக்க வை உன் தொடுகையினால் என்னை சிவக்க வை...
தடுமாற வை உன்னை பாராமல் தவிக்க வை...
இன்புற வை உன் நினைவுகளால் என்னை சுழலவை..
காதலா !
காதல் செய்...உன் காதலால்
என்னை காதலிக்கச் செய்!

***********************************************************************************