கருகிய கனவுகள்

காணும் காட்சியெல்லாம்
கேட்கும் செய்தியெல்லாம்
படிக்கும் இதழ்களெல்லாம்
தினந்தோறும் விபத்துகள்,
கொலை, கொள்ளை,
தீவிரவாதம்
மரணங்கள் மரணங்கள் மரணங்கள்
கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து
மரத்துப் போனது மனசு

பட்டமரம் துளிர்க்குமா

மரத்துப்போன மனதில் கலக்கமா
கலங்கியது நெஞ்சம்
காணாத காட்சிகண்டு

குருத்துகள் சருகாகலாம்

வீணையும் விறகாகலாம்
மழலைகள் மரக்கரியாகுமா...

கண்முன்னில் காட்சியான

கரிமக் கவிதைகள்
வாழும்நாள் வரை வரைவின்மாறாத
வடுக்களாய் நெஞ்சில்

விழிகளில் விழுந்த துளிகள்

மாயுமா இல்லை காயுமா
இதயத்தில் கசிந்த காரம்
குறையுமா இனி மறையுமா

ஆறுதல் தேறுதல் எத்தனை நேரினும்

காலம் ஆற்றும் காயமா
எழுதும் மையிலும்
கண்ணீரின் கலக்கம்

நெருப்பிற்கோ நெஞ்சமில்லை

அறிந்திருந்தும் தெரிந்திருந்தும்
ஆபத்தில் கைவிட்டு
அழிவிற்குள் செலுத்திய அறிவோர்

படிப்பதற்கு சென்ற பிள்ளை

நொடிப்பொழுதில் இன்று இல்லை
பார்வையாளர் பரிதவிப்பே இதுவெனில்
பாசப் பெற்றோர் படும்பாட்டை என்சொல

ஒன்றல்ல இரண்டல்ல

ஒருநூறு ஒருசேர
மாண்டு மரப்பாய்ச்சி போல் காண
*வேண்டும் கல்நெஞ்சம்!