செம திரை விமர்சனம் | Sema Movie Review | Thirai Vimarsanam

சென்னை: திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞனுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் 'செம'.


நடிகர்கள் - ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா, காயத்திரி, ஜனா, இயக்கம் - வள்ளிகாந்த், தயாரிப்பு - இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் பி.ரவிச்சந்திரன், ஒளிப்பதிவு - விவேகானந்தன், இசை - ஜி.வி.பிரகாஷ்
திருச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குழந்தை (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பன் ஓமகுண்டம் (யோகிபாபு). நண்பனுடன் சேர்ந்து குட்டியானையில் (வாகனம்) காய்கறி, மீன், கருவாடு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரம் செய்யும் சுறுசுறுப்பான இளைஞன் குழந்தை. மூன்று மாதத்துக்குள் கல்யாண நடக்கவில்லை என்றால் அடுத்த ஆறு வருடத்துக்கு திருமணம் நடக்காது என குடுகுடுப்பை காரரும், ஜோசியக்காரரும் பயமுறுத்த, தாய், மகன், நண்பன் என மூவரும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்குகிறார்கள். 
உள்ளூரில் யாரும் பெண் கொடுக்க மறுப்பதால், மனமுடைகிறார் குழந்தை. கடைசியாக வெளியூர் சென்று அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்) - அந்தி மந்தாரை (கோவை சரளா) தம்பதியின் மகள் மகிழினியை (அர்த்தனா பினு) பெண் பார்க்கிறார்கள். இருவீட்டாருக்கும் பிடித்துப்போக திருமணம் முடிவாகிறது. மகிழினிக்கும் - குழந்தைக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே மனம் மாறும் மன்சூர் அலிகான் கல்யாணத்தை நிறுத்துகிறார். இதனால் அசிர்த்தி அடையும் ஜி.வி.பிரகாஷின் தாய் மீண்டும் தற்கொலைக்கு முயல்கிறார். ஜி.வி.பிரகாஷ் அர்த்தனாவை எப்படி திருமணம் செய்கிறார்?, பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை.
படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. முதல் படம் என்பதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் காமெடி களத்தை கையில் எடுத்து, ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். ஒரு முழுநீள காமெடி, குடும்பக் கதைக்கு தேவையான அம்சங்களை திரைக்கதையில் புகுத்தி, பார்வையாளர்களுக்கு போர் அடிக்காத வகையில் படத்தை இயக்கி இருக்கிறார். படம் உண்மையேல செம.....