விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் படங்களின் கதைகள் சற்றே வித்தியாசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவர் இது வரை நடித்தப் படங்கள் மூலம் நமக்கு ஏற்படுத்தியுள்ளார். அந்த நம்பிக்கை இந்தப் படத்திலும் வீணாகப் போகவில்லை. அதே சமயம் ஒரு மத்தியமானப் படத்தைத் தான் கொடுத்திருக்கிறார். அந்த அளவில் சற்று ஏமாற்றமே. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் எழுதி இயக்கியுள்ளப் படம். வணக்கம் சென்னை அவரின் முதல் படம். அதே மாதிரி ஒரு லைட்டான படம் இது.
ஆரம்பம் விறுவிறுப்பாக உள்ளது. அமெரிக்காவில் சுவாரசியமாகத் தொடங்கும் கதை இந்தியா வந்த பிறகு எப்பவும் போல ஒரு மசாலா கலவையாக மாறிவிடுகிறது. விஜய் ஆண்டனியிடம் ஒரு நல்லவர் என்கிற நம்பகத் தன்மை அவர் முகத்திலும் உடல் மொழியிலும் நிறைய இருப்பதால் அதுவே அவர் செய்யும் பல பாத்திரங்களுக்குப் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. இது இந்தப் படத்திலும் கைக் கொடுக்கிறது. நடிப்பைப் பொறுத்த வரையில் நன்றாக செய்திருக்கிறார்
.
தந்தையைத் தேடி அவர் கிராமத்துக்கு வரும்போதே அங்கு அறிமுகமாகும் சில பாத்திரங்களிலேயே யார் அவர் தந்தையாக இருப்பார் என்று யூகிக்கும் அளவுக்குக் கதை சாதாவாக உள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் அவர் தந்தையாக நினைக்கும் பாத்திரத்தின் பிளாஷ் பேக்கை நமக்குக் காட்டுகையில் இள வயது நபராக விஜய் ஆண்டனியே வருவது கமலைப் போல தசாவதார ஆசையைத் தீர்த்துக் கொள்ள என்று தோன்றினாலும் பாத்திரங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட எந்த மெனக்கெடலும் இல்லாததால் சோபிக்கவில்லை. மேலும் பாத்திரத்தை வேறு படுத்த மூக்குக் கண்ணாடியோ, முகத்தில் ஒரு துப்பட்டாவோ போட்டு வருவது அந்தக் காலத்தில் எம்ஜிஆர் முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு மாறு வேடத்தில் வருவதற்கு ஈடாக உள்ளது. இப்போதெல்லாம் சினிமாவும், பார்ப்பவர் எதிர்ப்பார்ப்புகளும் நிறைய மாறிவிட்டன. கிருத்திகா இதை மனத்தில் கொள்ள வேண்டும்.
அஞ்சலியை வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். அத்துனூண்டு பாத்திரம். எல்லா பிளாஷ் பேக்கிற்கும் விஜய் ஆண்டனி வந்தா மாதிரி அப்பாத்திரத்தின் பெண் ஜோடிகளுக்கும் அஞ்சலியையே பயன்படுத்தியிருக்கலாமோ? ஆனா ரொம்ப குழப்பமா இருந்திருக்கும் சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத் மற்ற பெண் பாத்திரங்கள். நடிப்பைப் பொறுத்த வரையில் அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். காமெடிக்கு யோகி பாபு, நடிப்பும் காமெடியும் பரவாயில்லை. இரண்டு கதைக் களத்திற்கு வில்லன் குழு ஒன்றே. விஜய் ஆண்டனியே மூன்று நான்கு பாத்திரங்களில் வருவதால் செலவும் மிச்சப்படுகிறது.
அரும்பே அரும்பே பாடல் தேன். மற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. (இசை விஜய் ஆண்டனியே தான்) எடிடிங்க் மூலம் படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கியிருக்கலாம். முதல் பாதி ஒரு மணி நேரம் தான். ஆனால் இடைவேளை வரும்போது ரொம்ப நேரம் ஆன மாதிரி தோன்றுகிறது. ஒவ்வொரு பிளாஷ்பேக்கும் பொறுமையை சோதிக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
கடைசி க்ளைமேக்ஸ் அப்பாவைத் தப்பானவரா காட்டாமல் முடித்திருக்கிறார். அந்தத் தந்தைப் பாத்திரம் மாசு படக் கூடாது என்பதற்காக செய்யப்பட்டப் புனைவு எனினும் நன்றே! சும்மா பார்த்துட்டு வரலாம். எந்த மெஸ்ஸேஜும் இல்லை. அவர் தேடலுக்கான அழுத்தமான காரணம் இல்லாததால் நமக்குப் படத்தில் ஒட்டுதலும் இல்லை. ஞாயிறு தொலைக்காட்சியில் பார்க்க ஏதுவான படம்!