பி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்க



அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.
சில பி.டி.எப். கோப்புகளை இணையத்திலேயே பார்க்க படிக்க வகை செய்யப்பட்டிருக்கும். இதில் சில பக்கங்களை அல்லது பத்திகளை காப்பி செய்திட முயற்சி செய்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகாது. ஏனென்றால், அதனை பி.டி.எப். ஆக வடிவமைத்தவர் காப்பி  செய்வதனைத் தடை செய்திடும் தளையை அமைத்திருப்பார்.  இதில் நம்மை மிக மிக கோபப்பட வைத்திடும் நிகழ்வாக, நாம் சில வேளைகளில் கட்டணம் செலுத்திப் பெற்ற பி.டி.எப்.கோப்புகளிலும் இந்த தளைகள் இருக்கும். ஒரு சில பி.டி.எப். கோப்புகள் பாஸ்வேர்ட் தடையுடன் வரும். இதனை நாம் எதுவுமே செய்திட முடியாது. லட்டு போல பி.டி.எப். பைல் கிடைத்தும், உடைத்துச் சாப்பிட இயலவில்லையே என்று கவலைப்படுவோம்; ஆதங்கப்படுவோம் மற்றும் ஆத்திரப்படுவோம். இந்த கவலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நமக்கு உதவிடும் இணையதளம் ஒன்று உள்ளது. இந்த தளம் பி.டி.எப். பைல் ஒன்றில் உள்ள நகலெடுக்கும், அச்செடுக்கும் தளைகளை நீக்கித் தருகிறது. அதே போல பாஸ்வேர்ட் தடை இருந்தால், அதனையும் உடைத்துத் தருகிறது.  இந்த தளத்தின் பெயர் http://www.freemypdf.com  இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் நடுப்பக்கத்தில் மிக முக்கியமான பிரவுஸ் (Browse)  பட்டனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, தளைகள் மற்றும் தடைகள் கொண்ட பி.டி.எப். கோப்பினைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடவும். கோப்பின் அதிக பட்ச அளவு 7 எம்.பிக்குள் இருக்க வேண்டும். கோப்பு வெற்றிகரமாக மேலே அந்த தளத்திற்கு அனுப்பப் பட்டவுடன் Do It   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஒருசில நொடிகளில், தளைகளும் தடைகளும் நீக்கப்பட்ட பி.டி.எப்.கோப்பு உள்ள புதிய இணையப் பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் அந்த பைலுக்கான லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்து அந்த கோப்பினை இறக்கிப் பயன்படுத்தவும். இந்த சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதற்கு ஏதேனும் நன்கொடையாகக் கட்டணம் செலுத்தலாம்.  இவ்வாறு தளைகளை நீக்குதல், பூட்டப்பட்ட வீட்டின் பூட்டுகளை உடைத்துத் திருட்டுத்தனமாகச் செல்வதற்குச் சமமில்லையா என உங்கள் மனது கேட்கலாம். எனவே தான் இந்த சேவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு அல்ல என்று இந்த தளத்தில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது.